மேட்டூர் அணையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை.
மேட்டூர் அணையில் வெடிகுண்டு நிபுணர் குழுவினர் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்பநாயுடன் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேட்டூர் அணையில் ஓய்வு பெற்ற துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் 34 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மேட்டூர் அணை பூங்காவில் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் வந்தனர். இவர்கள் காவிரியில் நீராடி விட்டு ,அணைக்கட்டு முனியப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பூங்காவிற்கு சென்றனர்.
இதனிடையே சேலத்தில் இருந்து உதவி ஆய்வாளர் ஜெய்சிங் தலைமையில் 4 பேர் கொண்ட வெடிகுண்டு நிபுணர்கள் மேட்டூர் அணைக்கு வந்தனர். இவர்கள் மோப்பநாய் தாரணி மற்றும் மெட்டல் டிடெக்டர் கொண்டு மேட்டூர் அணையில் சோதனை செய்தனர். அணையின் நுழைவு பகுதி, வலது கரை, இடது கரை, கீழ்மட்ட மதகு, மேல்மட்ட மதகு, பவளவிழா கோபுரம் ஆகிய பகுதிகளில் தீவிர சோதனை செய்தனர். இது குறித்து வெடிகுண்டு நிபுணர்கள் கூறுகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடைபெறும் வழக்கமான சோதனை என்றனர். சோதனையின் எந்த ஒரு பொருளும் கைப்பற்றப்படவில்லை என தகவல் தெரிவித்தனர். வெடிகுண்டு நிபுணர்களின் திடீர் சோதனையால் மேட்டூர் பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.