கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிப்பு
கல்வராயன்மலையில் 8000 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 120 லிட்டர் சாராயத்தை போலீசார் அழித்தனர்.
கள்ளக்குறிச்சி எஸ்.பி., சமய்சிங்மீனா உத்தரவின் பேரில், கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், கரியாலுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் கல்வராயன்மலை பகுதியில் மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மணியார்பாளையம் வள்ளப்பாறை ஓடை அருகே, பேரல்களில் சாராய ஊறலும், லாரி டியூப்களில் சாராயமும் இருந்தது தெரிந்தது.
தொடர்ந்து, 200 லிட்டர் கொள்ளளவு வீதம், 40 பேரல்களில் இருந்த 8000 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 4 லாரி டியூப்களில் 120 லிட்டர் சாராயம் ஆகியவற்றை போலீசார் அங்கேயே கொட்டி அழித்தனர். விசாரணையில் மணியார்பாளையம் அண்ணாமலை,30; செந்தில், 28; உட்பட 5 பேர் சாராய ஊறல் போட்டிருந்தது தெரியவந்தது. உடன், அண்ணாமலை, செந்தில் ஆகிய இருவரையும் கைது செய்து, ராஜேந்திரன், சுரேஷ், சக்திகணேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.