ரூ.20 பணத்துக்காக விவசாயி அடித்துக் கொலை
திருச்சி மாவட்டம், கொன்னைக்குடியில் உணவகத்தில் சாப்பிட்ட பாக்கி தொகை ரூ 20 பணம் கொடுக்க காலதாமதமானதால் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கொன்னக்குடியைச் சேர்ந்த அந்தோணி மகன் இயேசுதாஸ் (58) அதே பகுதியில் வசிக்கும் ஜோசப்ராஜ் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இவர் கடைக்கு அடிக்கடி டீ மற்றும் டிபன் சாப்பிடுவதை வழக்கமாக கொண்ட இயேசுதாஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உணவு அருந்திவிட்டு 20 ரூபாய் பாக்கி சொல்லிவிட்டு சென்றுள்ளார் இந்நிலையில் கடந்த 8 ம்தேதி இரவு 9 மணி அளவில் கடை வழியாக இயேசுதாஸ் சென்றுள்ளார்.
அப்போது கடையின் உரிமையாளர் ஜோசப்ராஜ் மனைவி ஆரோக்கியமேரி ஆகியோர் இயேசுதாசை வழி மறித்து நீ சாப்பிட்ட பழைய பாக்கி 20 ரூபாயை கொடுத்து விட்டு செல்லுமாறு கூறியுள்ளனர். இதனால் ஆரோக்கியமேரிக்கும் இயேசுதாஸூக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கடை உரிமையாளர் ஜோசப்ராஜ் மூங்கில் கட்டையால் இயேசுதாஸை தாக்கினார். இதில் இயேசுதாஸ் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
அக்கம் பக்கத்தினர் அவர் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்தனர.பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த லால்குடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடித்து கொலை செய்யப்பட்ட இயேசுதாஸுக்கு ப்ளோரா ராணி என்ற மனைவியும் ஆமோஸ் டோனிபிளார் என்ற மகனும் நான்கு பெண் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கட்டையால் தாக்கிய கொலை செய்த ஜோசப்ராஜ் மற்றும் அவரது மனைவி ஆரோக்கிய மேரி இருவரும் தலைமறைவாக உள்ளனர்.