பரமத்தி வேலூர் அருகே விவசாயி தற்கொலை
பரமத்தி வேலூர் அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
பரமத்தி வேலூர் தாலுகா, சோழசிராமணி அருகே உள்ள எலந்தகுட்டை பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (55). விவசாயி. இவரது மனைவி அருக்காணி (47). முத்துசாமி கடந்த மூன்று வருடங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
ஆனால் பல்வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றும் முழுமையாக குணமாகாததால் முத்துசாமி மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து விட்டதாக தனது மனைவி கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அருக்காணி விஷம் குடித்து உயிருக்கு போராடிய தனது கணவரை காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி முத்துசாமி உயிரிழந்தார். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.