விவசாயிகள் அறிவித்த சாலை மறியல் போராட்டம் வாபஸ்
வெள்ளத்தில் சேதமான பயிர்களுக்கு நிவாரணம் மற்றும் காப்பீடு வழங்க கோரி விவசாயிகள் அறிவித்த சாலை மறியல் போராட்டம் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தற்காலிகமாக கைவிடப்பட்டது.
Update: 2024-01-07 06:17 GMT
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மற்றும் எட்டயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 அன்று பெய்த அதிக கனமழையினால் சேதமடைந்த பயிர்களுக்கு முழுமையான நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், 5ஆம் தேதி விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் அதிமுகவினர் மற்றும் விவசாயிகள் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எம்.கோட்டூர் விளக்கில் சாலை மறியல் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்திருந்தனர். இது தொடர்பாக சாலை மறியல் போராட்டத்தை கைவிடக்கோரி விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் விவசாயிகள் மற்றும் கட்சியினரிடம் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விளாத்திகுளம் மற்றும் எட்டையபுரம் வட்டாட்சியர்கள், துணை காவல் கண்காணிப்பாளர், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை உதவி இயக்குநர்கள் மற்றும் விளாத்திகுளம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் என பலர் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளாக கனமழையினால் பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களுக்கும் முழு நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு தொகையை முழுவதுமாக வழங்க வேண்டும். நிவாரணம் வழங்கும் 5 ஏக்கர் என்ற வரம்பு நிலையை தளர்த்தி அனைத்து பரப்புகளுக்கும் முழு நிவாரணம் வழங்க வேண்டும். 5 ஏக்கர் என்ற வரம்பிற்கு மட்டும் நிவாரணம் என்பதை விவசாயிகளுக்கு வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும். பயிர் காப்பீடு நிறுவனமான IFFCO TOKIO நிறுவனத்தை மாற்றி விட்டு THE NEW INDIA ASSURANCE COMPANY-ஐ மீண்டும் கொண்டு வர வேண்டும். என்பன போன்ற கோரிக்கைகள் விவசாயிகள் தரப்பில் முன் வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவில்பட்டி கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்து அறிக்கை அனுப்பப்படும் என்று தெரிவித்ததை ஏற்றுக்கொண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தினை தற்காலிகமாக கைவிட்டனர்.