அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயறு நுண்ணூட்டம் செயல் விளக்கம்
அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயறு நுண்ணூட்டம் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில், அட்மா திட்டத்தின் கீழ் உளுந்து சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பயறு நுண்ணூட்டம் செயல்விளக்கத்தினை, தஞ்சாவூா் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் (உழவா் பயிற்சி நிலையம்) அய்யம்பெருமாள் வழங்கினார். உளுந்து சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கு ஏக்கருக்கு 2 கிலோ பயறு நுண்ணூட்டத்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கொண்டு பூக்கும் மற்றும் காய்பிடிக்கும் தருணத்தில் இலைவழி தெளிப்பாக தெளிக்க வேண்டும் என்று விவசாயிகளிடம் அப்போது விளக்கிக் கூறினார். தொடர்ந்து, வேளாண்மை உதவி இயக்குநா் ஜி.சாந்தி பேசுகையில், "வேளாண்மை விரிவாக்க மையத்தில் 50 விழுக்காடு மானியத்தில் நெல் நுண்ணூட்டம், பயறு நுண்ணூட்டம், நிலக்கடலை நுண்ணூட்டம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தேவைப்படும் விவசாயிகள் தங்களது தொகுதி உதவி வேளாண்மை அலுவலரை அணுகி நுண்ணூட்டத்தினை வாங்கி பயன்பெறலாம்" எனத் தெரிவித்தார். பயறு நுண்ணூட்ட செயல்விளக்கத்தினை துணை வேளாண்மை அலுவலர் து.சிவசுப்பிரமணியன், வட்டார தொழில்நுட்ப மேலாளா் மோ.சுரேஷ் ஆகியோர் செய்து காண்பித்தனர்.
செயல்விளக்கத்திற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் ஆ.தமிழழகன், சி.ஜெயக்குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர். தொடர்ந்து விவசாயிகளுக்கு பயறு, கடலை, நெல் நுண்ணூட்டம் மானியத்தில் வழங்கப்பட்டது.