சாலை பணிக்காக கால்வாய் இடிக்க விவசாயிகள் எதிர்ப்பு
நான்கு வழி சாலை பணிகளுக்காக தேங்காய்பட்டணம் கால்வாயை உடைத்து தொட்டிபாலம் கட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது. இந்தச் சாலை பணிகளின் குறுக்கே வரும் சாலைகள், கால்வாய்களை உடைத்து புதிய கட்டுமான பணிகள் நடக்கிறது. அந்த வகையில் கருங்கல் அருகே பள்ளியாடி பகுதியில் உள்ள நான்கு வழி சாலை பணிக்காக பட்டணம் கால்வாயை உடைத்து அதன் மேல் தொட்டி பாலம் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த கால்வாய் மூலம் கிடைக்கும் நீர் ஆதாரத்தை காெண்டு 20, 000 ஏக்கர் பாசனப்பரப்பில் நெல், வாழை, காய்கறி, தென்னை விவசாயம் நடந்து வருகிறது.
மேலும் கிள்ளியூர் பகுதியில் பல பகுதிகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாகவும் குடிநீர் தேவைகளுக்கும் பயன்பெற்று வருகிறது.இந்த நிலையில் முறையாக திட்டமிடாமல் பட்டணம் கால்வாய் உடைத்து பணிகள் நடந்ததால் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே பள்ளியாடி இரட்டை ரயில் பாதைக்காக பழைய கடை பகுதியில் ரயில்வே துறையால் தொட்டி பாலம் கட்ட வேண்டி உள்ளது.
எனவே ரயில்வே, நெடுஞ்சாலைத்துறை ஒருங்கிணைந்து மேற்கண்ட கட்டுமான பணிகளையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி விவசாய சங்கங்கள் சார்பில் குமரி மாவட்ட பாசன துறை சங்க தலைவர் வின்ஸ் ஆன்றோ மற்றும் கீழ் குளம் கோபால் ஆகியோர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தினார்