கன்னியாகுமரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டம் பி.ஆர் .பாண்டியன் பங்கேற்பு.
Update: 2024-03-16 10:43 GMT
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கன்னியாகுமரியில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது கன்னியாகுமரி துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் தலைமையில் போலீசார் விவசாயிகளை போராட விடாமல் அத்துமீறி செயல்பட்டதாகவும், ஆர்ப்பாட்டம் நடத்த லஞ்சம் கேட்டதாகவும் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாக இன்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடந்த போராட்டத்திற்கு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி ஆர் பாண்டியன் தலைமை வகித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில் ,- கடந்த 10ஆம் தேதி கன்னியாகுமரியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது, போலீசார் விவசாயிகளை கைது செய்துள்ளனர். இதில் சுற்றுலா சென்ற பெண்கள் மற்றும் அவரது மூன்று வயது குழந்தையுடன் கைது செய்துள்ளனர். அவர்கள் வந்த தனியார் வேனை சிறை பிடித்து, அவர்களை மிரட்டி 30 ஆயிரம் லஞ்சம் பெற்று விடுவித்த கன்னியாகுமரி டிஎஸ்பி மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இந்த போராட்டத்தில் மாவட்ட பாசனதார் சபை தலைவர் வின்ஸ்ஆன்றோ, வழக்கறிஞர்கள் ஜெபா, ஹோமர் லால், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உட்பட மாவட்ட முழுவதும் இருந்து ஏராளமான விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.