கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்
ரேஷன் கடைகளில் தமிழக அரசு தேங்காய் எண்ணெய், எள் எண்ணெய் ஆகியவற்றை மானிய விலையில் விற்க கோரி தென்னம்பாளையம் உழவர் சந்தை அருகில் கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தை அருகில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்கள் தமிழக அரசின் ரேஷன் கடைகளில் மலேசிய இந்தோனேசிய பாமாயிலுக்கு பதிலாக நம் நாட்டு தேங்காய்,கடலை,எள் எண்ணைகளை மானிய விலையில் விற்க கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் நட்பமைப்புகள் சார்பில் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெறும் தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு எவ்வித தீர்வும் தமிழக அரசு ஏற்படுத்தி தராததால் தமிழ்நாடு அரசை கண்டித்து 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர்,
போராட்டத்தின் போது விவசாயிகள் கைகளில் தேங்காய் எண்ணெய் ,நல்லெண்ணெய் ஆகியவற்றை கைகளில் ஏந்தியும், தமிழக அரசு எதிராக கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,இன்று விடுமுறை தினம் என்பதால் அதிக அளவில் உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்குவதற்காக மக்கள் கூடுவது வழக்கம்,இதனால் அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விவசாயிகள் கைகளில் கருப்பு கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் தென்னம்பாளையம் உழவர் சந்தை முன்பு அரை மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு காணப்பட்டது.