மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் டிராக்டர் பேரணி
மத்திய அரசின் விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் விரோதப் போக்கை கண்டித்து தஞ்சையில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடைபெற்றது.
ஒன்றிய அரசின் விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் விரோதப் போக்கை கண்டித்து, ஐக்கிய விவசாயிகள் முன்னணி தலைமையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள், விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், சிஐடியு, ஏஐடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில், தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரி எதிரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய விளையாட்டுத் திடலில் இருந்து நூற்றுக்கணக்கான டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் பேரணி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் என்.வி. கண்ணன் தலைமையில் துவங்கியது.
இப்பேரணி பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி, புதிய பேருந்து நிலையம், பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, மேலவஸ்தாச்சாவடி ரவுண்டானாவில் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருப்பதை கண்டித்தும், லக்கிம்பூர்கேரியில் விவசாயிகளை படுகொலை செய்த ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டோனி உள்ளிட்டா முக்கிய குற்றவாளிகளை பதவி நீக்கம் செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் மின்சார திருத்த மசோதாவை கொண்டு வரவும், உதய் மின் திட்டத்தை அமல்படுத்தவும் முயற்சி மேற்கொண்டுவது குறித்தும், விவசாயிகள் விரோதப் போக்கை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்தப் பேரணிக்கு ஐக்கிய விவசாய முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலர் சின்னை பாண்டியன், பல்வேறு விவசாய சங்க தலைவர்கள் முத்து.உத்திராபதி, சோ.பாஸ்கர், பி.செந்தில்குமார், ஆர்.ராமச்சந்திரன், காளியப்பன், சு.பழனிராஜன், பி.கோவிந்தராஜ், இரா.அருணாச்சலம், ஏ.கே.ஆர்.இரவிச்சந்திரன், முகம்மது இப்ராஹிம், வீர.ராஜேந்திரன், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் சி.ஜெயபால், கு.சேவியர், ஆர்.தில்லைவனம், என்.மோகன்ராஜ், கே.ராஜன் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள், மாதர் சங்க மாநிலச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.சுரேஷ்குமார், எஸ்.எப்.ஐ மாநிலச் செயலாளர் அரவிந்த்சாமி, மாவட்டச் செயலாளர் சந்துரு, மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.