மணல் கடத்தலை தடுக்க வலியுறுத்தி மே.7 இல் உண்ணாவிரதம்
திருவோணம் அருகே நடைபெறும் மணல் கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்
Update: 2024-05-01 14:52 GMT
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி - அக்னி ஆற்றில் தொடர் மணல் திருட்டுக்கு துணை போகும் வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து இப்பகுதி மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இப்பகுதியில் உள்ள அக்னி ஆற்றில் இரவு, பகலாக மணல் திருட்டு நடந்து வருகிறது. திருவோணம் காவல்துறையினர், வருவாய்துறை அதிகாரிகளும் இதனை கண்டுகொள்ளாமல் இருப்பதால் அதிக அளவில் மணல் திருட்டில் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பணப் பரிமாற்றம் நடைபெறுவதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம், வருங்கால சந்ததிகளை பாதுகாக்க வேண்டும். எனவே அக்னி ஆற்றில் நடைபெறும் மணல் திருட்டை தடுத்து நிறுத்த ஆட்சித்தலைவர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 7 ஆம் தேதி நெய்வேலி தென்பாதி, வடபாதி கிராம பொதுமக்கள் மற்றும் சமூக நீதிக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்து திருவோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.