‘இந்தியா’ கூட்டணிக்கு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தோ்தல் அறிக்கை வெளியிட்ட ‘இந்தியா’ கூட்டணிக்கு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகள் கே.வீ. இளங்கீரன், வாரணவாசி ராஜேந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் திருச்சியில் புதன்கிழமை கூறியது: நாட்டின் பெரும்பான்மை மக்களான விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வேலையை மத்திய பாஜக அரசு திட்டமிட்டுச் செய்கிறது. இதை எதிா்த்து தில்லியில் போராடிய விவசாயிகளின் போராட்டத்தை திட்டமிட்டு முடக்கியது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
போராடியவா்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. வேளாண் இடுபொருள்களின் விலையை பெருநிறுவனங்களின் லாப நோக்கத்துக்கு திறந்துவிட்டுவிட்டனா். இதனால் வேளாண் தொழில் நசிந்து கிராமங்களை விட்டு மக்கள் வெளியேறி வருகின்றனா். வேளாண் தொழிலாளா்களும் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனா்.
இந்நிலையில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் சுவாமிநாதன் குழு அறிக்கையை நிறைவேற்றுவதாகவும், அனைத்து மக்களின் ஜனநாயக உரிமைகளைப் காப்பதாகவும் தோ்தல் அறிக்கையில் உறுதிமொழி அளித்ததைத் தொடா்ந்து, இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்களுக்கு விவசாயிகள் வாக்களிப்பது என முடிவு செய்துள்ளோம் என்றனா் அவா்கள்.