காளை மாடு முட்டியதில் பெண் துப்புரவு பணியாளர் படுகாயம்

கெலமங்கலம் பேரூராட்சி பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண் தூய்மை பணியாளரை கோவில் மாடு முட்டி தாக்கியதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-01-11 13:59 GMT

காயமடைந்த  சிவம்மா

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கெலமங்கலம் மேல்தெருவை சேர்ந்தவர் சிவம்மா (50) இவர் கெலமங்கலம் தேர்வுநிலை பேரூராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் முத்தப்பா உயிரிழந்த நிலையில் இவர் தனியாக வசித்து வருகிறார். இன்று காலை சிவம்மா வழக்கம்போல கெலமங்கலம் சௌடேஸ்வரி அம்மன் கோயில் தெருவில் துப்புரவு பணிகளை மேற்கொண்டிருந்தார்.

அப்போது அந்த தெருவில் கோயிலுக்கு சொந்தமான ஏராளமான மாடுகள் சென்றுள்ளன அதில் ஒரு காளை மாடு திடீரென துப்புரவு பணிகளை மேற்கொண்டிருந்த சிவம்மாவை பின்புறமாக முட்டி தூக்கி வீசி உள்ளது. இதில் சிவம்மாவிற்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அவரை வீட்டு கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அதன்பின் அங்கிருந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பின்னர் அவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் கெலமங்கலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கெலமங்கலம் நகரின் பல இடங்களில் கோயில் மாடுகள் அதிக அளவில் சுற்றித்திரிந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. சாலையில் செல்லும் பொதுமக்களும் மாணவர்களும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News