சாமி சிலையை சுற்றி வேல் வேலி - செயல் அலுவலர் அலுவலகம் முற்றுகை
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பி அக்ரஹாரம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ முனியப்பன் கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மார்கழி மாத இரண்டாம் செவ்வாய்க்கிழமையன்று திருவிழா நடைபெறுவது வழக்கம். நீங்கள் ஆண்டிற்கான திருவிழா ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், கோயிலின் மூலவரான ஸ்ரீ முனியப்பன் சிலையினை சுற்றிலும் ஆள் உயர அளவிற்கு பக்தர்களால் அன்பளிப்பாக வழங்கப்படும் வேல்களை கொண்டு வேலி போல் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முனியப்பன் சிலைக்கு கீழ் உள்ள மூலவர் சிலையை காண முடியாத நிலையில், முனியப்பன் சிலையில் பாதி மறைக்கப்படுவதாகவும், கிராம மக்களிடம் கருத்துக்களை கேட்டறியாமல் செயல் அலுவலர் தன்னிச்சையாக செயல்படுவதாக தெரிவித்து 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செயல் அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இந்த நிலையில் செயல் அலுவலர் ஜீவானந்தம் தக்கார் ப.சங்கர், ஆய்வாளர் தனுஷ் சூர்யா ஆகியோர்கள் முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம், கோவிலில் அமைக்கப்பட்டிருந்த வேல்கள் அகற்றப்பட்டு, பின்னர் கிராம மக்களிடம் ஆலோசனை நடத்தி மீண்டும் சிலையனை சுற்றி வேல்கள் அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். கோயிலின் மூலவர் சிலையினை சுற்றி அமைக்கப்பட்ட வேல்களை அகற்ற பூசாரி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் மூலவர் சிலையினை சுற்றி புதிதாக அமைக்கப்பட்டுள்ள வேல்களை அகற்றக் கோரி பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.