பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் தீ மிதி திருவிழா. ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர்.

Update: 2024-03-25 17:00 GMT
பரமத்திவேலுார் அருகே பிரசித்தி பெற்ற நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தீ மிதி திருவிழா ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம்.  அதேபோல் இந்த வருடமும் நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோயில் திருவிழா  கடந்த 10- ஆம் தேதி இரவு கம்பம் நடும் விழாவுடன் திருவிழா தொடங்கியது. 11 ஆம் தேதி துவங்கி 23 ஆம் தேதிவரை தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் , சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை வடிசோறு நிகழ்ச்சியும், அக்னிசட்டி எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று மதியம் ஆண்,பெண் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி ஊர்வலமாக கோவிலுக்கு  வந்து கோவில் முன்பு அமைக்கப்படும்  தமிழகத்திலேயே மிக நீளமானது என கூறப்படும் 63 அடி நீளமும்,6 அடி அகலமும் கொண்ட பூக்குண்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண் பக்தர்கள் தீமிதித்தும், பெண்கள் பூ வாரிப்போட்டும்  தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.  இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். செவ்வாய்க்கிழமை கிடா வெட்டும் நிகழ்ச்சியு ம், பக்தர்கள் அலகு குத்தி நேர்த்தி கடனை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. புதன்கிழமை அதிகாலை கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவில் எட்டுப்பட்டி அறங்காவலர் குழுவினர், விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News