சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் தீமிதி விழா !
சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-29 08:35 GMT
சேலம் குமாரசாமிபட்டியில் மிகவும் பிரசித்திபெற்ற எல்லைப்பிடாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 19-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் பூஜை நடத்தப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி விழா நேற்று நடைபெற்றது. இதற்காக கோவில் அருகே குண்டம் அமைக்கப்பட்டிருந்தது. தீமிதி விழாவையொட்டி அம்மனுக்கு பல்வேறு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் மாலை தீமிதி விழா தொடங்கியது. இதில் பக்தர்கள் திரளானவர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் சிலர் கைக்குழந்தையுடன் தீமித்தனர். ஆண், பெண் போலீசாரும் சீருடையுடன் தீ மிதித்தனர். மாலை 5 மணிக்கு தொடங்கிய தீமிதி விழா இரவு 8 மணி வரை நடந்தது. தொடர்ந்து அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. விழாவை காண கோவிலில் ஏராளமானவர்கள் குவிந்திருந்தனர். பின்னர் எல்லைப்பிடாரியம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. தொடர்ந்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு பால் குட ஊர்வலம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டு, பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு அம்மனுக்கு தங்க கவசம் சாத்துதல் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.