பேருந்துகள் இயக்கம் குறைவு: மக்கள் அவதி
திருச்சி மத்திய மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்துகள் இயக்கம் குறைவாகவே இருந்தது.
திருச்சி மத்திய மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்துகள் இயக்கம் குறைவாகவே இருந்தது. தொலைதூரப் பேருந்துகள், நகரப்பேருந்துகள் என அனைத்து வகையான பேருந்து இயக்கங்களிலும் சுமாா் 20 முதல் 30 சதவிகித பேருந்துகள் இயக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பயணிகள் சற்று கூடுதல் நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக, திருச்சியில் புற நகா்ப்பகுதிகளுக்கு இயக்கப்படும் மபசல் மற்றும் நகரப் பேருந்துகளின் இயக்கம் 4-க்கு 2 என்ற வகையில் இருந்தது. அதாவது நாளொன்றுக்கு 4 முறைகள் இயக்கப்படும் பகுதிகளில் பேருந்துகள் 2 முறை மட்டுமே இயக்கப்பட்டது.
இதுகுறித்து பேருந்து ஓட்டுநா், நடத்துநா்களிடம் கேட்டபோது சேலம் திமுக இளைஞரணி மாநாட்டுக்கு பேருந்துகள் சென்றிருப்பதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றனா். இதுபோன்ற சூழ்நிலைகளில் தனியாா் பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் திருச்சியில் தனியாா் பேருந்துகளின் இயக்கமும் வெகுவாக குறைந்து காணப்பட்டது.