கடலில் மூழ்கி பலியான மீனவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி
Update: 2023-11-07 02:48 GMT
குமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் பி.ஆரோக்கியம் (வயது 50). இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து கடலில் மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். இந்த படகில் மாதா காலனியை கடந்த செப்டம்பர் மாதம் 25-ந்தேதி குளச்சல் மீன் பிடித்துறை முகத்திலிருந்து 16 தொழிலாளர்களுடன் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். 28-ந்தேதி நள்ளிரவு விசைப்படகு தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராமல் திடீரென விசைப்படகு கடலில் மூழ்கியது. இந்த சம்பவத்தில் 13 மீனவர்கள் மீட்கப்பட்டனர். மீனவர்கள் பயஸ், ஆன்றோ, கே.ஆரோக்கியம் ஆகியோர் கடலில் மூழ்கி பரிதாபமாக பலியாயினர். இந்த 3 மீனவர்களின் குடும்பத்தினருக்கு அரசின் முதற்கட்ட நிவாரணமாக தலா ரூ.2 லட்சம் கடந்த அக்டோபர் மாதம் 12-ந்தேதி வழங்கப்பட்டது. தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் மீனவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கினார். இதையடுத்து நேற்று குமரி மாவட்ட விசைப்படகு மீன் பிடிப்பவர் நலச்சங்கம் சார்பில் மேற்கூறிய மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி விசைப்படகு சங்க அலுவலகத்தில் நடந்தது. கோட்டார் முன்னாள் பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ் கலந்துகொண்டு நிதிக்கான காசோலைகளை வழங்கினார். விசைப்படகு சங்க தலைவர் வர்க்கீஸ் உட்பட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.