மூங்கித்தாபட்டி வனப்பகுதியில் தீ விபத்து
திருமயம் அருகே மூங்கித்தாபட்டி வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.
திருமயம் அருகே உள்ள மூங்கித்தாபட்டி வனப்பகுதியில் நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்ததும் திருமயம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜராஜசோழன் தலைமையிலான மீட்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் இருந்த 50க்கும் மேற்பட்ட பனைமரங்கள், செடி, கொடிகள் கருகி சேதமடைந்தன.
தீ விபத்து நடந்த இடத்தின் அருகே தனியார் பள்ளி மற்றும் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, அரசு விடுதி ஆகியவை அமைந்துள்ளன. தீ கட்டுப்படுத்தப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து திருமயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் திருமயம் அருகே குரும்பப்பட்டியில் பெரிய பண்ணைக்காடு உள்ளது. இங்கு நேற்று தீப்பற்றியது. திருமயம் தீயணைப்பு நிலையத்தினர் வந்து தீயை அணைத்தனர். காற்றின் வேகத்தால் தீ பரவியதில் 50க்கும் அதிகமான பனைமரங்கள், சவுக்கு மரங்கள் கருகின. 515 ஏக்கர் பரப்பளவில் சருகுகள் எரிந்தன.