வாகன உதிரி பாக குடோனில் தீ விபத்து
சேலம் கந்தம்பட்டி அருகே வாகன உதிரி பாக குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து சாம்பலானது.
சேலம் கந்தம்பட்டி ஹவுசிங் போர்டு அருகே தனியார் டிவிஎஸ் நிறுவனத்தின் உதிரிபாக குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் கனரக மற்றும் இரண்டு சக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்கள், ஆயில், டயர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது.
மேலாளராக ஜவகர் என்பவர் பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல பணியை முடித்துவிட்டு நேற்று இரவு குடோனை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.இந்த நிலையில் நள்ளிரவு சுமார் 1:30 மணியளவில் குடோனில் இருந்து கரும்பு புகை கிளம்பி தீ பிடிக்க ஆரம்பித்து மளமளவென பரவி குடோன் முழுவதும் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.
இதையறிந்த வாட்ச்மென் சூரமங்கலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீர் பீச்சி அடித்தனர்.
தீ கொழுந்து விட்டு எரிந்ததால் செவ்வாய்பேட்டை, ஓமலூர், வாழப்பாடி உள்ளிட்ட தீ அணைப்பு நிலையத்திலிருந்து 7 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
சுமார் 7 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தகவல் அறிந்து வந்த சூரமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து சாம்பலானது.