ஊத்துமலையில் தீ விபத்து - போராடி அணைத்த தீயணைப்புத்துறையினர்

சேலம் ஊத்துமலை வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்புத்துறையினர் 12 மணிநேரம் போராடி அணைத்தனர். காய்ந்த மரங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-02-19 04:05 GMT

தீ விபத்து 

சேலம், பிப்.19- சேலம் ஊத்துமலையில் காய்ந்த மரங்களில் மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊத்துமலையில் தீ

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த 10 நாட்களாக பகலில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். குறிப்பாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மலைகள், குன்றுகளில் தீ தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில், சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் அருகில் உள்ள ஊத்துமலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென தீப்பிடித்தது.

காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென மலையின் ஒரு பகுதியில் மேல்நோக்கி எரிந்து கொண்டிருந்தது. ஊத்துமலையில் காட்டுத்தீ எரியும் தகவல் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் பரவியது. வனத்துறையினர் விசாரணை இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஊத்துமலை பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் மாலை 6.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தால் ஊத்துமலையில் சிறிய அளவிலான மரங்கள், மரக்கிளைகள், காய்ந்த சருகுகள் போன்றவை எரிந்து சாம்பலானது. அதேசமயம், மலையின் மற்றொரு பகுதிக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டதால் பெரிய மரங்கள் தப்பியது. கோடை காலத்தில் பகல் நேரத்தில் சிலர் ஊத்துமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் நேற்று முன்தினம் அங்கு சென்றிருந்த மர்ம நபர்கள், மரக்கிளைகளுக்கு தீ வைத்துவிட்டு வந்திருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதனால் அந்த நபர்கள் காய்ந்த மரங்களில் தீவைத்தார்களா? என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கோடை காலத்தில் வனப்பகுதிக்குள் பொதுமக்கள் செல்லாத வகையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News