சாயக்கழிவு கலப்பால் நஞ்சராயன் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
திருப்பூர் நஞ்சராயன் குளத்தில் மழையை பயன்படுத்தி சாயக் கழிவுகளை திறந்து விட்டதால் குளத்தில் மீன்கள் செத்து மிதக்கிறது.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே அமைந்துள்ள நஞ்சராயன் குளம் ஆண்டுதோறும் வலசை வரும் பறவைகளின் சரணாலயமாக விளங்கி வருகிறது இங்கு ஆஸ்திரேலியா அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வரும் பறவைகள் தங்கி விட்டு செல்வது வழக்கம்.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசு நஞ்சராயன் குளத்தை பறவைகள் சரணாலயமாக அறிவித்து உள்ளது. 280 ஏக்கர் பரப்பளவு கொண்ட நஞ்சராயன் குளத்தில் ஏராளமான மீன்கள் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையின் போது ஓடை நொய்யலாறு என அனைத்து இடங்களிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனை பயன்படுத்தி கொண்டு சில சாய ஆலைகள் முறைகேடாக சாயக்கழிவுகளை திறந்து விட்டுள்ளனர் இந்த ராசயனம் மிகுந்த கழிவு நீர் நஞ்சராயன் குளத்தில் கலந்ததால் அதில் வாழ்ந்த எண்ணற்ற மீன்கள் உயிரிழந்து தண்ணீரில் மிதக்க துவங்கியுள்ளது மேலும் மீன்கள் இறந்து போய் அகற்றப்படாமல் இருப்பதால் அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீச துவங்கியுள்ளது.
உடனடியாக உயிரிழந்த மீன்களை அப்புறப்படுத்தி சுகாதார சீர்கேட்டை தடுப்பதுடன் முறைகேடாக சாயக்கழிவுகளை திறந்து விட்ட சாய ஆலைகளை கண்டறிந்து கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.