பஸ் மோதி மீனவர் காயம்: நிற்காமல் சென்ற அரசு பஸ்
மீனவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற அரசு பஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Update: 2024-05-04 14:06 GMT
கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி வடக்கு காலனி தெருவை சேர்ந்தவர் மரிய ஆண்டனி (60) மீன்பிடி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த அந்தோணி அடிமை என்பவர் உடன் சம்பவ தினம் காலை வட்டம் பகுதியில் உள்ள ஒரு வைத்தியசாலை செல்வதற்காக இருவரும் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை மரிய ஆண்டனி ஓட்டினார். இரணியல் பகுதியில் வந்த போது எதிரே நாகர்கோவில் நோக்கி வேகமாக சென்ற அரசு பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மரிய ஆண்டனி படுகாயம் அடைந்தார். இந்த விபத்தில் பஸ் டயரில் சிக்கி ஸ்கூட்டர் பலத்த சேதம் அடைந்தது. எனினும் அரசு பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் சென்று விட்டார். இதில் காயமடைந்த மரியர் ஆண்டனியை அக்கம்பக்கத்தினர் மற்றும் அந்தோணி அடிமை ஆகியோர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து புகாரின் பேரில் இரணியல் போலீசார் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.