சத்தியமங்கலம் கூட்டுறவு வங்கியில் நிதி கையாடல் செய்த ஐந்து பேர் கைது
சத்தியமங்கலம் கூட்டுறவு வங்கியில் நிதி கையாடல் செய்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள சத்தியமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 22.04. 2015 தேதி முதல் 04.06.2021 வரையிலான காலங்களில் போலியான நிரந்தர வைப்பு ரசீது மூலம் பல்வேறு நபர்களிடம் நிரந்தர வைப்பு தொகையினை பெற்று அத்தொகையினை சங்க கணக்கிற்கு கொண்டு வராமல் கையாடல் செய்தது,
பல்வேறு நகைக்கடன்தாரர்களுக்கு அதிகமான தொகை வழங்கி பொய்கணக்கு எழுதி கையாடல் செய்தது, நகைக்கடன் தள்ளுபடி பெறுவதற்கு பல்வேறு நபர்களின் பெயரில் போலியான நகைக்கடன் எழுதியதில் 4 கோடியே 50 லட்சத்து 60 ஆயிரம் சங்கத்தின் ரொக்கத்தை கையாடல் செய்துள்ளதாக திண்டிவனம் துணைப்பதிவாளர் சொர்ணலட்சுமி விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் கடந்த 7.02.2024 ஆம் தேதி புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிந்த சங்க செயலாளர் சையத்சாதிக்பாஷா, பசுமலை முதுநிலை எழுத்தர் முருகன்-சிற்றெழுத்தர், விஜயராஜ் விற்பனையாளர் ,சாந்தி நிர்வாக குழுத்தலைவர்,அருள்மேரி மற்றும் 11 நிர்வாக சங்க உறுப்பினர்கள் இந்த கையாடலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து கூட்டுறவு சங்க பணத்தை கையாடல் செய்த பசுமலை முதுநிலை எழுத்தர் முருகன், சிற்றெழுத்தர் விஜயராஜ், விற்பனையாளர் சாந்தி, நிர்வாக குழுத்தலைவர், அருள்மேரி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.