போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு
திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டியில் மக்களவை தேர்தலை முன்னிட்டு, போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு, டில்லியில் இருந்து துணை ராணுவத்தினர் (மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள்) வந்துள்ளனர். அவர்கள் கோபால்பட்டி மற்றும் சாணார்பட்டியில் போலீஸாருடன் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர்.
இதில் ஏ.டி.எஸ்.பி., தெய்வம் தலைமையில், காவல் ஆய்வாளர் தங்கமுனியசாமி, உதவி காவல் ஆய்வாளர்கள் ராஜேந்திரன், வேலுமணி ஆகியோருடன் கோபால்பட்டி அரசு மருத்துவமனையில் இருந்து தொடங்கி வேம்பார்பட்டி ஆண்கள் மேல்நிலை பள்ளி வரையிலும் மற்றும் சாணார்பட்டியிலும் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
இதில் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை இராணுவ வீரர்கள் 176 பேர் மற்றும் போலீஸார் அணிவகுப்பில் பங்கேற்றனர். இதைபோல் வெள்ளிக்கிழமை மாலை நத்தம் பேருந்து நிலையத்தில் இருந்து அவுட்டர் வரை துணை ராணுவத்தினர் மற்றும் போலீஸார் இணைந்து அணிவகுப்பு நடத்தினர் .