தொப்பூர் கணவாய் சாலையில் விபத்துகளை தடுக்க 35 இடங்களில் ஒளிரும் விளக்குகள் அமைப்பு
Update: 2024-01-03 08:49 GMT
தொப்பூர் கணவாய் சாலையில் விபத்துகளை தடுக்க 35 இடங்களில் ஒளிரும் விளக்குகள் அமைப்பு தர்மபுரி, ஜன.3: தொப்பூர் கணவாய் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்க 35இடங்களில் இரவு முழுவதும் ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிக விபத்துக்கள் இந்தியாவின் மிக நீண்ட சாலையான காஷ்மீர்- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை தர்மபுரி மாவட்டம் வழியாக செல்கிறது. இந்தசாலை தொப்பூர் கணவாய் பகுதியில் சுமார் 6 கிலோமீட்டர் நீளத்திற்கு வளைவுகளுடன் தாழ்வாக செல்கிறது. அதிக கனரக வாகனங்கள் செல்லும் இந்த சாலையில் அடிக்கடி வாகனங்கள் கவிழ்ந்து விபத்து மற்றும் உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. தமிழகத்தில் அதிக வாகன விபத்துக்கள் நடக்கும் பிளாக் ஸ்பாட் பகுதிகளில் ஒன்றாக இந்த பகுதி சாலை உள்ளது. இந்த சாலையில் விபத்துகளை தடுக்க மாவட்ட நிர்வாகம்,வட்டார போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலை துறையினர் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தற்போது இந்த சாலையில் வாகன விபத்துக்கள் குறைந்துள்ளன. 35 ஒளிரும் விளக்குகள் தொப்பூர் கணவாய் சாலையில் விபத்துகளை தடுக்கும் வகையில் ஒளிரும் விளக்குகள் தனியார் பங்களிப்புடன் சமூக பொறுப்பு நிதியிலிருந்து தற்போது அமைக்கப்பட்டுள்ளன.இந்த சாலையில் கட்ட மேடு பகுதி முதல் இரட்டை பாலம் வரை 3 கிலோமீட்டர் தூரத்துக்கு 35 இடங்களில் இரவு நேரங்களில் ஒளிரும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன இந்தப் பணியை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன் மற்றும் பாளையம் சுங்கச்சாவடி அதிகாரிகள் பார்வையிட்டனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தொப்பூர் கணவாய் சாலை பகுதியில் விபத்துக்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தற்போது நவீன தொழில்நுட்பத்தில் சோலார் பிலிங்கர் ஒளிரும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை இரவு முழுவதும் ஒளிர்ந்து கொண்டே இருக்கும். இதனால் வாகன டிரைவர்களுக்கு எச்சரிக்கை உணர்வு அதிகரிக்கும். இது விபத்துகளை தடுப்பதற்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்தனர்.