மலர் வணிக வளாகம் திறப்பு

தஞ்சாவூரில் புதிதாகக் கட்டப்பட்ட மலர் வணிக வளாகம் திறப்புவிழா நடைபெற்றது.

Update: 2024-05-23 13:19 GMT

தஞ்சாவூரில் புதிதாகக் கட்டப்பட்ட மலர் வணிக வளாகம் திறப்புவிழா நடைபெற்றது.


தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் அருகே நாகை சாலையில் பூ வியாபாரிகளால் புதிதாகக் கட்டப்பட்ட மலர் வணிக வளாகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. தஞ்சாவூர் பூக்காரத் தெருவில் சுப்பிரமணிய சுவாமி கோயிலை சார்ந்த இடத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக பூச்சந்தை இயங்கி வருகிறது. இதில், 60}க்கும் அதிகமான பூ வியாபாரிகள் மொத்தம் மற்றும் சில்லரையில் மலர் வணிகம் செய்து வந்தனர். இந்நிலையில், ஒன்றரை ஆண்டுக்கு முன்பு இட வாடகை, வண்டிக் கட்டணம் பல மடங்கு கூடுதலாக வசூலிக்கப்படுவதாக பூ வியாபாரிகளுக்கும், சந்தை ஏலதாரருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதனால், ஏறத்தாழ 40 பேர் இச்சந்தையிலிருந்து விலகி விளார் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு இடம்பெயர்ந்தனர். இதைத்தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், சுமூகமான நிலை ஏற்படாததால், விளார் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஏறத்தாழ 40 பேர் ஒன்றரை ஆண்டாக மொத்தம் மற்றும் சில்லரையில் பூ வியாபாரம் செய்து வந்தனர். இவர்கள் ஒன்றிணைந்து தஞ்சாவூர் பூ வியாபாரிகள் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி, தொல்காப்பியர் சதுக்கம் அருகே நாகை சாலையிலுள்ள ராஜீவ் நகரில் 21 ஆயிரம் சதுர அடி பரப்பளவுக்கு சொந்தமாக இடம் வாங்கினர். இதில், 9 ஆயிரத்து 600 சதுர அடியில் புதிதாகக் கட்டடம் கட்டி, 50 கடைகளை அமைத்துள்ளனர்.  மேலும், வாகன நிறுத்துமிடம், கழிப்பறை, குடிநீர், கண்காணிப்பு கேமராக்கள், ஜெனரேட்டர் போன்ற வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளனர். இந்த வளாகத்துக்கு தஞ்சை மலர் வணிக வளாகம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.  இந்த வளாகத்தை வழக்குரைஞர் எஸ்.எஸ். ராஜ்குமார், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வியாழக்கிழமை திறந்து வைத்தனர். இதில், மொத்தம் மற்றும் சில்லரை பூ வியாபாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News