திண்டிவனம் பகுதியில் பறக்கும் படையினர் அதிரடி
திண்டிவனம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.11 லட்சம் சிக்கியது.
Update: 2024-03-30 10:19 GMT
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் மேம்பாலம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் வல்லம் ஒன்றிய உதவி பொறியாளர் முருகானந்தம் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஒலக்கூர் கிராமத்தை சேர்ந்த சின்னராஜ் மகன் ரவிச்சந்திரன்(வயது 28) என்பவர் ரூ.72 ஆயிரத்து 660, உடன் வந்த திருவண்ணாமலை சிங்காரவாடி பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (30) ரூ.11 லட்சம் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் பணத்துக்கு உரிய ஆவணத்தை அவர்களிடம் கேட்போது தினேஷ்குமார், தான் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் உதவி மேலாளராக பணிபுரிந்து வருவதாகவும், இந்த பணம் வங்கிக்கு சொந்தமானது என்றும் தெரிவித்தார். அப்போது பணத்துக்குரிய ஆவணத்தை அதிகாரிகள் கேட்டபோது அவர்கள் 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரிடம் இருந்து ரூ.11 லட்சத்து 72 ஆயிரத்து 660-ஐ பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், சப்-கலெக்டருமான திவ்யான்ஷூ நிகமிடம் ஒப்படைத்தனர்.