வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிர சோதனை !
தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
By : King 24x7 Angel
Update: 2024-04-01 09:10 GMT
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும், அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சேலம் அம்மாப்பேட்டை காலனி பகுதியில் நேற்று மதியம் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கமலகண்ணன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீகிருஷ்ணன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அம்மாப்பேட்டையில் இருந்து வீராணம் நோக்கி வந்த மினி லாரியை வழிமறித்து சோதனை செய்தனர். அதில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் அல்லது பரிசு பொருட்கள் ஏதேனும் பதுக்கி வைத்து கொண்டு செல்லப்படுகிறதா? என சந்தேகத்தின்பேரில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அந்த லாரிக்குள் மளிகை பொருட்கள் இருப்பதாகவும், அதனை வீராணம் பகுதிக்கு கொண்டு செல்வதாகவும் டிரைவர் தெரிவித்தார். இருப்பினும், அவரிடம் சோதனை செய்தபோது. ரூ.15 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. ஆனால் அதற்கான ஆவணங்களை அவர் வைத்திருந்ததால் அந்த லாரியை பறக்கும் படையினர் விடுவித்தனர்.