புதிய ஊதியம் நிர்ணயம் செய்யக்கோரி

சேலத்தில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2024-03-12 11:43 GMT

சேலத்தில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் புதிய ஊதியம் நிர்ணயம் செய்வது உள்பட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாநில இணைச்செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, தொடக்க கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு புதிய ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும், ரேஷன் கடை பணியாளர்கள் மாலை 6 மணிக்கு மேல் வீடு, வீடாக சென்று விரல் கைரேகை பதிவு செய்ய வற்புறுத்துவதை கைவிட வேண்டும், பதவி உயர்வின்போது, அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படுவது போல் கூடுதல் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மேலும், கடந்த 2021-ம் ஆண்டுக்கு பின்னர் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கடந்த ஆண்டு தீபாவளிக்கு 20 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்ட நிலையில் கூட்டுறவுத்துறை 10 சதவீதம் மட்டுமே வழங்கியது.

இதனால் மீதம் உள்ள 10 சதவீதத்தை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதுகுறித்து மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம் கூறுகையில், தொடக்க கூட்டுறவு அனைத்து பணியாளர் சங்கத்தினரின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாத பட்சத்தில் வருகிற 25-ந் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்துள்ளோம், என்றார்.

Tags:    

Similar News