உலக காடுகள் தினத்தை முன்னிட்டு மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
தஞ்சாவூரில் உலக காடுகள் தினத்தை முன்னிட்டு வேளாண் கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
உலக காடுகள் தினத்தை முன்னிட்டு ஆர்.வி.எஸ் வேளாண்மைக் கல்லூரி, மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி தோழகிரிப்பட்டியில் நடந்தது. தொடர்ந்து, மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. உலக நிலப்பரப்பில் 30 விழுக்காடு காடுகள் உள்ளன. காடு என்பது வெறும் மரங்கள் மட்டுமல்ல, இது வாழ்க்கை கட்டமைப்பில் ஒன்று. மரங்கள் மற்றும் பிற தாவரங்கள் அடர்த்தியாகவும், அதை சார்ந்த உயிரினங்களும் வாழும் இடம் காடு. காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும், எனவே காடுகளை பாதுகாக்க வேண்டியது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஐ.நா சபை., சார்பில் ஆண்டுதோறும் மார்ச் 21ஆம் தேதி உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்தத் தினத்தில் காடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும், வன வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆர்.வி.எஸ் வேளாண்மைக் கல்லூரி, இளம் அறிவியல் நான்காம் ஆண்டு மாணவிகள் சார்பில், வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ், உலக காடுகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி தோழகிரிப்பட்டியில் நடந்தது.
இப்பேரணியை ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா சிவகுமார் துவக்கி வைத்தார். இப்பேரணியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சுமார் 120 பேர் கலந்து கொண்டனர். தோழகிரிப்பட்டியில், ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா சிவகுமார் தலைமை வகித்து மரக்கன்றுகளை நடவு செய்தார்.
பிறகு, மாணவிகள், ராஜலெட்சுமி, பிரதட்சனா உள்ளிட்ட வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் 11 பேர் விதைப்பந்தைகளை, பள்ளி மாணவர்களிடம் கொடுத்து நீர்நிலைகள், கிராமப்பகுதிகளில் விதைக்கப்பட்டது.