லஞ்ச ஒழிப்பு வழக்கில் முன்னாள் கலெக்டர் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம்.
கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா வ.பெரியகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (35), விவசாயியான இவர் வண்டிப்பாளையத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் மூலம் அரசு அறிவித்துள்ள விவசாய நிலங்களை திருத்தி வரப்பு மடித்தல் திட்டத்தில் தன்னுடைய 2 ஏக்கர் 33 சென்ட் நிலத்தை திருத்தம் செய்து வரப்பு மடிக்க கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஓவர் சீயராக பணியாற்றிய வேலு(45) என்பவரை அணுகினார்.
இதையடுத்து அவர் கூறியதன்பேரில் குமார், தனது நிலத்தை திருத்தி வரப்பு மடிக்கும் வேலையை செய்து முடித்தார். முதல் 3 வாரங்களில் நடைபெற்ற வேலைகளை ஒவ்வொரு வாரமும் ஓவர்சீயர் வேலு, நிலத்தை நேரில் பார்வையிட்டு அந்த வாரத்திற்கான தொகையை வழங்க பரிந்துரை செய்தார். அதன்படி பயனாளிகளுக்கு உரிய தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. பின்னர் 4-வது வாரம் பணி நடைபெற்றபோது ஓவர்சீயர் வேலு, அப்பணிகளை பார்வையிட வரவில்லை. உடனே வேலுவிடம் சென்று குமார் கேட்டதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்றார். அதன் பிறகு சில நாட்கள் கழித்து ரசாயன பொடி தடவிய லஞ்சப் பணத்தை குமார் எடுத்துக்கொண்டு வேலுவிடம் கொடுத்தார். அந்த பணத்தை வேலு வாங்கியபோது அவரை விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
அந்த சமயம் கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக பிரிக்கப்படாமல் விழுப்புரம் மாவட்டமாக இருந்த நிலையில் அப்போதைய மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த அண்ணாத்துரை, ஓவர்சீயர் வேலுவை துறை ரீதியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் மொத்தம் 30 பேரை சாட்சிகளாக சேர்த்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது.
அப்போது இவ்வழக்கின் முதல் சாட்சியாக சேர்க்கப்பட்ட அப்போ தைய விழுப்புரம் மாவட்ட கலெக்டரும், தற்போது தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகத்தின் ஆணையராக பணியாற்றி வருபவருமான அண்ணாத்துரை, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பராணி முன்பு நேரில் ஆஜராகி, இவ்வழக்கு தொடர்பாக சாட்சியம் அளித்தார். தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, இவ்வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (டிசம்பர்) 20-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.