தர்மபுரி அதிமுக நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் அறிக்கை
அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சரும் தற்போது பாலக்கோடு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான கேபி அன்பழகன் அதிமுக நிர்வாகிகளுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் வழியில் மக்களின் பேரன்பைப் பெற்றிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தைத் தணிப்பது வழக்கம்.
அதன்படி தற்போது, எந்த ஆண்டும் இல்லாத வகையில் கோடை வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருப்பதால், இந்த கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின் பேரில் தர்மபுரி மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளும், கட்சியினரும் தாங்கள் வாழும் பகுதிகளில்,
ஆங்காங்கே தண்ணீர் பந்தல்களை உடனடியாக அமைத்து, மக்களின் தாகத்தை தணிக்கும் அறப் பணிகளில் ஈடுபடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். பொதுமக்களின் தாகத்தைத் தணிப்பதற்காக தர்மபுரி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள முக்கிய ஊர்களில் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் அமைக்கப்படும் தண்ணீர் பந்தல்களை கட்சி நிர்வாகிகள்,
காலையில் ஒரு முறையும், பிற்பகல் ஒரு முறையும் நேரில் சென்று பார்வையிட்டு சுகாதாரமான முறையில் அவை செயல்படுவதற்கு ஏற்ற திட்டத்தோடு இந்தப் பணிகளை நடைமுறைப்படுத்திட கேட்டுக் கொள்கிறேன். என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.