குளச்சல் மீனவர் குடும்பத்தினரை முன்னாள் மத்திய அமைச்சர் சந்திப்பு
பொன். ராதாகிருஷ்ணன் தூத்துக்குடியில் மீனவர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட குளச்சல் மீனவரின் வீட்டிற்கு சென்று மீனவர்களின் குடும்பத்தினர்களை சந்தித்தார்.
Update: 2024-03-24 08:30 GMT
குமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000 க்கும் மேற்பட்ட பைபர் வள்ளம் கட்டுமரங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. கடந்த 19 ம் தேதி தூத்துக்குடி கடல் பகுதியில் மீன் பிடித்ததாக குளச்சல் 5 விசைப்படகுகளில் இருந்த 73 மீனவர்களையும் மற்றும் ஒரு கேரள விசைப்படகையும், அதிலிருந்த 13 மீனவர்களையும் தூத்துக்குடி மீனவர்கள் சிறை பிடித்தனர். உடனே குளச்சல் மீனவர்கள் தூத்துக்குடி மீன் வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தூத்துக்குடி மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக முடிவு ஏற்படவில்லை. சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள், விசைப்படகுகள் விடுவிக்காததை கண்டித்து நேற்று முன்தினம் குளச்சல் விசைப்படகினர் மற்றும் பைபர் வள்ளம், கட்டுமர மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டனர். இந்நிலையில் நேற்றிரவு ஒன்றிய முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பா. ஜ.க வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் தூத்துக்குடியில் மீனவர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட குளச்சல் மீனவரின் வீட்டிற்கு சென்று மீனவர்களின் குடும்பத்தினர்களை சந்தித்தார். அப்போது அவர் மீனவர்களை மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.