திருவண்ணாமலை கிரிவல பாதையில் பக்தர்களிடம் வசூல் மோசடி
திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் செய்தும், கோவில் கட்ட நன்கொடை வேண்டும் எனவும், சிலர் பண வசூல் மோசடி செய்து வருகின்றனர். இதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
Update: 2023-10-29 02:55 GMT
நன்கொடை வசூல்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ., துாரம் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு செல்கின்றனர். அப்போது பக்தர்கள், சாதுக்களுக்கு பிச்சை இடுதல், தெய்வ காரியங்களுக்கு செலவிடுவதால், தம் கர்ம வினைகள் கழிந்து, நல்லது நடக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளனர். சிவனடியார்கள் ஆசிர்வாதம் செய்தால், சிவபெருமானே நேரில் வந்து ஆசிர்வதிப்பது போல், பக்தர்கள் கருதுகின்றனர். இதை பயன்படுத்தி, போலி சாமியார்கள், 5,000க்கும் மேற்பட்டோர் பவுர்ணமி நாட்களில் பிச்சை கேட்டு, கிரிவல பாதை முழுதும் அமர்ந்துள்ளனர். சில போலி சாமியார்கள், பக்தர்களை ஆசிர்வதித்து விபூதி வழங்குவதும், வேல் கொண்டு ஆசிர்வாதம் செய்தல் போன்ற செயலிலும் ஈடுபட்டு, பக்தர்களிடம் பண மோசடி செய்து வருகின்றனர். பவுர்ணமி தோறும், 1 கி.மீ., துாரத்திற்கு, இரு குழுக்கள் என, 25க்கும் மேற்பட்ட குழுவினர், கோவில் கட்ட நன்கொடை கேட்டு, பேனர்களை கையில் ஏந்தி, பண வசூலில் ஈடுபடுகின்றனர். சிலர் தங்கள் குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்து பணம் சம்பாதிக்கின்றனர். கடந்த மாத பவுர்ணமி நாளில், பிச்சை எடுத்த, 14 குழந்தைகளை போலீசார் மீட்டனர். அதேபோன்று மோசடியில் ஈடுபடும் போலி சாதுக்கள், போலி ஆன்மிகவாதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.