கட்டணமில்லா பேருந்து பயணம்: தஞ்சையில் 14.89 கோடி பயனாளிகள் பலன்
கட்டணமில்லா பேருந்து பயணம் மூலம் தஞ்சை மாவட்டத்தில் 14.89 கோடி பயனாளிகள் பலன் என ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில், கட்டணமில்லா பேருந்து பயணம் - விடியல் பயணம் திட்டத்தின் கீழ் 14 கோடியே 89 இலட்சத்து 44 ஆயிரத்து 428 பயனாளிகள் பயனடைந்துள்ளனர் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் மேலும் கூறியதாவது, “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்ற பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிக்கேற்ப, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏழை, எளியோர் நலன் காத்திட ஏராளமான நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். ஆட்சிப் பொறுப்பேற்ற தினத்திலேயே அரசுப் பேருந்துகளில் அனைத்து மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் சிறப்பு மிக்க திட்டத்திற்காக கையொப்பமிட்டனர்.
இந்த திட்டத்தின் வாயிலாக 445 கோடி முறை பயணம் செய்துள்ள பொதுமக்களுக்கு, மாதந்தோறும் தலா ரூ.888 வரை சேமிக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜூலை 2021 முதல் ஏப்ரல் 2024 வரை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டலம், அரசு நகரப் பேருந்துகளில் மகளிர் பயனாளிகள் 14 கோடியே 79 லட்சத்து 93 ஆயிரத்து 735 பேரும், மாற்றத்திறனாளிகள் 8 லட்சத்து 45 ஆயிரத்து 192 பேரும், மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள் 37 ஆயிரத்து 315 பேரும், திருநங்கைகள் 68 ஆயிரத்து 186 பேரும் ஆக மொத்தம் 14 கோடியே 89 லட்சத்து 44 ஆயிரத்து 428 பயனாளிகள் கட்டணமில்லா பேருந்து பயணம் திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். பயனாளி நிர்மலா இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த தஞ்சாவூர் மாவட்டம் ஈஸ்வரி நகரைச் சேர்ந்த நிர்மலா தெரிவிக்கையில்:- தேர்தல் நேரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அளித்த வாக்குறுதியின்படி பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டத்தினை, முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் உடனடியாக நடைமுறைப்படுத்தினார்கள். நான் தினமும் அதிகாலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஈஸ்வரி நகர் முதல் செங்கிப்பட்டி வரை அரசு பேருந்தில் பயணம் செய்து தனியார் நிறுவனத்தில் வேலைக்கு தினமும் சென்று வருகிறேன். முன்பெல்லாம் எனக்கு பேருந்து கட்டணமாக தினந்தோறும் 50 ரூபாய் வரை செலவாகும். தற்பொழுது இச்செலவுத் தொகையை சேமித்து எனது குழந்தைகளின் கல்விக் கட்டணம் செலுத்த பயன்படுத்திக் கொள்கிறேன். என்னைப்போன்ற ஏழை, எளியோர்களின் சிரமங்களை அறிந்து இத்திட்டத்தினை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். பயனாளி விஜயலெட்சுமி இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த தஞசாவூர் மாவட்டம், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த விஜயலெட்சுமி கூறுகையில், " நான் தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள உணவகத்தில் குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்து வருகிறேன். எனது இருப்பிடத்திலிருந்து அலுவலகத்திற்கு சென்று வர தினசரி பேருந்து கட்டணமாக 60 ரூபாய் வரை செலவாகும். இதனால் எனது மாதச் சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பேருந்து கட்டணத்திற்காக செலவழித்து வந்தேன்.
தற்பொழுது முதலமைச்சர் அய்யா செயல்படுத்தியுள்ள பெண்களுக்கான இலவச பேருந்துப் பயணத் திட்டத்தின்கீழ் நானும் பயனடைந்து வருகிறேன். இதன் மூலம் சேமிக்கப்படும் பணத்தினை எனது குடும்ப செலவிற்கு பயன்படுத்திக் கொள்கிறேன். பெண்களை முன்னேற்றக் கூடிய வகையில் இச்சிறப்பு மிக்க திட்டத்தினை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். இவ்வாறு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம், தஞ்சாவூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் மண்டலம் சார்பில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.