கண் பரிசோதனை முகாம்
வெங்கப்பாக்கத்தில் கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வெங்கம்பாக்கம் அரசினர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் சோழிங்கநல்லூரில் இயங்கி வரும் வீதிங்க் குளோபல் டெக்னாலஜி (ஐடி நிறுவனம்) சார்பில் பூவிருந்தவல்லி அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாமினை நடத்தியது.
முகாமிற்கு வீதிங்க் ஐடி கம்பெனியின் நிறுவனரும், முதன்மை செயல் அலுவலருமான ஆனந்த் தீனதயாளன் தலைமை தாங்கினார். நிறுவன முதன்மை தகவல் தொடர்பு அலுவலர் பிரியா, சமூக ஆர்வலர் நத்தமேடு ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெங்கம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வேண்டாமிர்தம் ஏழுமலை சிறப்பாளராக பங்கேற்று முகாமினை துவக்கி வைத்தார்.
முகாமில் கண் நீர் அழுத்த நோய், கிட்ட பார்வை, தூர பார்வை, மற்றும் கண்புரை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் வெங்கம்பாக்கம் மற்றும் சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த 200 க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்று கண் பரிசோதனை செய்து கொண்டனர். கண்புரை கண்டறியப்பட்ட 40 க்கும் மேற்ப்பட்டோர் பூவிருந்தவல்லி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு இலவசமாக அழைத்து செல்லப்பட்டு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டனர்.
கிட்ட பார்வை மற்றும் தூரப் பார்வை கண்டறியப்பட்டவர்களுக்கு இலவசமாக மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. இதில் மருத்துவமனையின் மருத்துவர்கள் ஆதித்யா , லாவண்யா, ஐடி நிறுவன மனிதவள பிரிவின் அலுவலர் செந்தமிழ் செல்வி, மேலாளர் ஆனந்த் ராபர்ட்சன் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.