கரூரில் இதயத்தை முன்னிலைப்படுத்தி இலவச தியான பயிற்சி
கரூரில் இதயத்தை முன்னிலைப்படுத்தி இலவச தியான பயிற்சி நடைபெற்றது.
கரூரில் செயல்படும் யோக மஹோத்சவம் மற்றும் ஹார்ட் ஃபுல்னெஸ் நிறுவனங்கள் இணைந்து, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்டரங்கில் இதயத்தை முன்னிலைப்படுத்தி மூன்று நாள் தியான பயிற்சி வழங்கி வருகிறது.
முதல் நாள் ஓய்வு நிலை பயிற்சியும், இரண்டாம் நாள் இன்று சுத்திகரிப்பு பயிற்சியும் மூன்றாம் நாள் நாளை தியான பயிற்சியும் வழங்கி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 45- நிமிடம் பயிற்சி வழங்கப்படுகிறது.
பிறகு அவரவர் இல்லத்தில் அவரவரே தியான பயிற்சியை மேற்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தல் செய்யப்பட்டது. இந்த நிறுவனங்கள் கரூர் மாவட்டத்தில் ஆனூர், வையாபுரி நகர், அண்ணா நகர், கோதைநகர், காந்திகிராமம், தான் தோன்றி மலை, வடிவேல் நகர், மணல்மேடு, தென்னிலை, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தோறும் பயிற்சி வழங்கி வருகின்றனர்.
ஏற்கனவே, இந்த பயிற்சி 15 வயதுக்கு மேற்பட்ட பத்தாம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணாக்கர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியின் மூலம் ஒவ்வொருவரும் மன அமைதி, பிரஷர் மற்றும் டென்ஷன் ஆகியவற்றுக்கு தீர்வு காண இயலும் என இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் நேச்சுரோபதி மருத்துவர் வர்ஷா அனைவருக்கும் விளக்கம் அளித்தார்.
மேலும் காணொளி காட்சி வாயிலாகவும் தியான பயிற்சி குறித்து விளக்கம் அளித்தனர். குறிப்பாக சர்க்கரை மற்றும் பிரஷர், இதய பாதிப்பு உள்ளவர்கள் இந்த தியான பயிற்சி மூலம் நல்ல தீர்வை கண்டு அவர்களும் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வாய்ப்பு உள்ளதாக விளக்கம் அளித்தார்.
இந்த பயிற்சியை இந்த அமைப்பைச் சேர்ந்த 11 பொறுப்பாளர்கள் சேவை மனப்பான்மையோடு பொது நலனை கருத்தில் கொண்டு பயிற்சி வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கரூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், வயதில் மூத்தவர்கள், இளைஞர்கள்,
இளம்பெண்கள், பள்ளி மாணவ- மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியை மேற்கொள்ள எவ்வித கட்டணமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.