ஆம்பூர் அருகே சாலை விபத்தில் பெண் குழந்தைகள் உயிரிழப்பு

ஆம்பூர் அருகே லாரி மீது பைக் மோதிய விபத்தில் இரண்டு பெண் குழந்தைகள் உயிரிழந்தனர்.;

Update: 2024-01-01 14:16 GMT

உயிரிழந்த குழந்தைகள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து.. லாரி சக்கரத்தில் சிக்கி இரண்டு பெண் குழந்தைகள் உயிரிழப்பு, 3 பேர் சிறு காயங்கள் உடன் உயிர் தப்பினர்.

தாய் கண் முன்னே இரண்டு பெண் குழந்தைகள் உயிரிழந்த சோகம்.. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரியகம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த பரந்தாமன் (42) இந்தியன் ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார்.

இவர் தன்னுடைய மனைவி காவேரி (வயது 37) மற்றும் 3 குழந்தைகளுடன் ஆங்கில புத்தாண்டான இன்று இருசக்கர வாகனத்தில் ஆம்பூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்று கொண்டு இருந்தார். அப்போது ஆம்பூர் அருகே மாராபட்டு என்ற இடத்தில் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி வளைவில் திரும்பியபோது பின்னால் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

இதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த கார்த்திகா(வயது 8), பேரரசி (வயது 6) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் லாரி சக்கரத்தில் சிக்கி நசுங்கி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பரந்தாமன், அவரது மனைவி காவேரி மற்றும் மூத்த மகள் இளவரசி(வயது 12) ஆகிய 3 பேர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆம்பூர் கிராமிய போலீசார் விரைந்து சென்று உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புத்தாண்டு தினத்தன்று இருசக்கர வாகனத்தில் கோயிலுக்கு சென்ற குடும்பத்தினர் விபத்தில் சிக்கி இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News