திருச்சி அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து
பெங்களூரில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற அரசு பஸ் திருச்சி அருகே கவிழ்ந்து விபத்து.
பெங்களூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு சொகுசு பேருந்து ஒன்று 36 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்றிரவு புறப்பட்டது. பேருந்தை சேலத்தை சேர்ந்த பூபதி ஓட்டி வந்துள்ளார். இதில் நடத்துனராக ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த மணி பணியில் இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று மண்ணச்சநல்லூர் அருகே நெ 2 கரியமாணிக்கத்தில் உள்ள திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது அரசு சொகுசு பேருந்து திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஓசூரைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவருக்கு காலில் படுகாயம் ஏற்பட்டது. ஓட்டுநர் உட்பட 3 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காலில் படுகாயம் அடைந்த பயணியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
லேசான காயமடைந்த ஓட்டுனர் உட்பட மற்ற பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற பயணிகள் அதிர்ஷ்ட வசமாக காயமின்றி உயிர்த்தப்பினர். காயமின்றி தப்பிய பயணிகளை மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.