அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா
கல்வி ஒழுக்கத்தின் மூலம் மாணவிகள் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என பள்ளி கல்வி இணை இயக்குனர் அறிவுரை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி வளாகத்தில் மன்றங்களின் சாதனைகளை பதாகைகளாக வைக்கப்பட்டு மாணவிகள் பரையிட்டனர். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது,10 மற்றும் 12ம்வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கும்,பல்வேறு கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்குமாவட்ட முதன்மைகல்வி அலுவலர் ரெஜினி தலைமை வகித்தார்.கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி,மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன்,மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மேரி டயானா ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா அனைவரையும் வரவேற்றார்.உதவி தலைமை ஆசிரியர் உஷா ஜோஸ்பின் ஆண்டறிக்கை வாசித்தார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கக இணை இயக்குனர் முனைவர் வை.குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது: கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தகைசால் பள்ளியாக உயர்ந்துள்ளது.
மாவட்டத்திற்கு ஒரு தகை சால் பள்ளி வீதம் 28 மாவட்டங்களில் தகைசால் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. மீதமுள்ள மாவட்டங்களில் தகைசால் பள்ளியாக தரம் உயர்த்திட பணிகள் நடந்து வருகிறது. தகைசால் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் உயர் கல்வி பெற்றிடும் வகையிலும் கலை விளையாட்டுகளில் திறமைகளை வெளிப்படுத்தவும் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு அறிவை தானமாக கொடுத்து எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் பணிபுரிபவர்களே ஆசிரியர்கள், எந்த கல் உளியின் வலியை பொறுத்துக் கொள்கிறதோ அந்த கல் சிற்பமாக மாறுகிறது. பள்ளிகளில் பயிலும் மாணவிகள் கல்வி, ஒழுக்கத்தின் மூலம் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும்.இவ்வாறு பேசினார்.
இதில் உதவி திட்ட அலுவலர் முனியசாமி, நகர்மன்ற உறுப்பினர் உலகுராணி,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜலட்சுமி,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்,முத்து முருகன்,வஉசி பள்ளி தலைமையாசிரியர் சுரேஷ்குமார்,பள்ளி துணை ஆய்வாளர் ரமேஷ்.உள்பட ஆசிரியர்கள்,மாணவிகள்,பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள்,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.உதவி தலைமை ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.