அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் கருப்புதுணி கட்டி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கண்களில் கருப்புதுணி கட்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் வாக்குறுதியளித்தபடி 70 வயது முடிந்த ஓய்வூதியதாரர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்திட வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட சிறப்பூதிய ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்கிட வேண்டும்.
மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் ஓய்வூதியர்கள் மருத்துவ சிகிச்சைக்கு செய்த முழுச் செலவுத் தொகையினை எவ்வித நிபந்தனையுமின்றி வழங்கிட வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகில் மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி தலைமையில் சங்கத்தினர் கண்களில் கருப்புதுணி கட்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சங்கத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.