போதிய கழிப்பறை வசதி இல்லாததால் அரசு பள்ளி மாணவர்கள் தவிப்பு
திருவாலங்காடு அருகே போதிய கழிப்பறை வசதி இல்லாததால் அரசு பள்ளி மாணவர்கள் தவிப்பு.
Update: 2024-03-21 16:54 GMT
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் ஊராட்சியில் காவல் நிலையம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி, 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு போதிய அளவு கழிப்பறை இல்லாததால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: மாணவர்களுக்கு போதிய அளவு கழிப்பறை வசதி இல்லை. கழிப்பறை சுத்தம் செய்ய நிரந்தர துப்புரவு பணியாளர் இல்லாததால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், மாணவ - மாணவியர் கழிப்பறைக்கு செல்வதை தவிர்க்க தண்ணீர் குடிப்பதில்லை. கடும் வெப்பத்தால் தண்ணீர் குடிக்க வேண்டிய நிலை ஏற்படும் போது, கழிப்பறைக்கு செல்லாமல் தவிர்ப்பதால், நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். தற்போது, மாணவர்கள் திறந்த நிலையில் புதர் பகுதியில் கழிப்பறைக்கு சென்று வருகின்றனர். அவ்வாறு செல்வதால் விஷப்பூச்சி கடிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, மாவட்ட கல்வி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, மாணவர்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து பள்ளி ஆசிரியர் கூறுகையில், 'கூடுதல் கழிப்பறை கேட்டு அரசுக்கு மனு கொடுத்துள்ளோம். தற்காலிக துப்புரவு பணியாளரை கொண்டு கழிப்பறையை சுத்தம் செய்து வருகிறோம்' என்றார்.