அரசுப்பள்ளியின் 91வது ஆண்டு விழா: முன்னாள் மாணவர்கள் பங்கேற்பு
அரசுப்பள்ளியின் 91வது ஆண்டு விழாவில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.
Update: 2024-02-17 06:44 GMT
ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழாவில் முக்கிய பொறுப்புகளில் உள்ள முன்னாள் மாணவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பங்கேற்றனர். பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை இந்த பள்ளியில் 400 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் 91ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் தற்போது இந்த ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராகவும், ஒன்றிய சேர்மன், ஒன்றிய கவுன்சிலராகவும் பதவி வகுத்து வருகின்றனர். எனவே தாங்கள் படித்த பள்ளியின் ஆண்டு விழாவை உள்ளாட்சி பிரதிநிதிகளாக பதவி வகிக்கக்கூடிய இந்த முன்னாள் மாணவர்கள் சிறப்பாக நடத்த முடிவு செய்தனர். அதன்படி தனியார் பள்ளிக்கு நிகராக நசரத்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ மாணவியர் பங்கேற்று ஆடல், பாடல், நாடகம் உள்ளிட்ட பல்வேறு திறன்களை வெளிப்படுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகளுடன் ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவில் நசரத்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா பொன்முருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் உமாமகேஸ்வரி சங்கர், ஊராட்சி மன்ற துணை தலைவர் சித்ரா துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூந்தமல்லி ஒன்றிய சேர்மன் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.