விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்ய விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுச்சேரி மாநிலம் திருபுவனையை சேர்ந்தவர் அப்துல்கரீம் (வயது 55), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 25.1.2019 அன்று தனது மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டையில் நடந்த உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மீண் டும் அங்கிருந்து விழுப்புரம் வழியாக புதுச்சேரி புறப்பட்டார். விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலையில் இருந்து நகருக்குள் உள்ளே வந்தபோது எதிரே விழுப்புரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கிச்சென்ற விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பஸ் மோதியதில் அப்துல் கரீம் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக நஷ்ட ஈடு கேட்டு அப்துல்கரீம் மனைவி மும்தாஜ், 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விழுப்புரம் மாவட்ட மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட அப்துல்கரீம் குடும்பத்திற்கு நஷ்டஈடாக ரூ.18 லட்சத்து 38ஆயிரத்து 750-ஐ விழுப்புரம் அரசு போக்குவரத் துக்கழகம் வழங்க வேண்டுமென 19.7.2022 அன்று உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்துக்கழகம் நஷ்டஈட்டு தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் மனுதாரர் சார்பில் வக்கீல் வேலவன் 13.3.2023 அன்று நிறை வேற்று மனுதாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி வெங்கடேசன், பாதிக்கப்பட்ட அப்துல்கரீம் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக வட்டியுடன் சேர்த்து ரூ.24 லட்சத்து 44 ஆயிரத்து 769-ஐ விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்க வேண்டுமென்றும், தவறும்பட்சத்தில் சம்பந்தப் பட்ட அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பஸ் ஜப்தி செய்யப்படும் என்றும் கடந்த 10.6.2024 அன்று உத்தரவிட்டார். இருப்பினும் அரசு போக்குவரத்துக்கழகம் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் உரிய நஷ்டஈடு தொகையை வழங்கவில்லை.
இந்நிலையில் காலை விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்கு புறப்பட தயாராக இருந்த விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பஸ்சை கோர்ட்டு உத்தரவின்படி முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் திவ்யா ஜப்தி செய்தார். அப்போது வக்கீல் வேலவன், மனுதாரர் மும்தாஜ் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் அந்த பஸ், கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டது.