கனிமவள லாரி மோதி அரசு ஊழியர் உயிரிழப்பு - பொதுமக்கள் போராட்டம்
நாகர்கோவில் அருகே கனிம வள லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் அரசு ஊழியர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து பொதுமக்கள் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தும் தூத்துக்குடி,நெல்லை மாவட்டங்களில் இருந்தும் கேரளாவிற்கு கனிம வளங்கள் அதிக அளவில் தினமும் ஏற்றி செல்லப்படுகிறது. இந்த கனிம வளம் கொண்டு செல்லப்படும் லாரிகளால் தினமும் விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவதாக கூறி அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதுடன் ஆங்காங்கே லாரிகளை சிறை பிடித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை வடசேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் நாதன் ஜெயக்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் நாகர்கோவிலில் இருந்து பூதப்பாண்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். கீழப்புத்தேரி பகுதி நான்கு வழி சாலை சந்திப்பில் சென்ற போது அந்த வழியாக வந்த கனிம வள லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் சம்பவ இடத்தில் நாதன் ஜெயக்குமார் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இதைப் பார்த்து அங்கு திரண்ட பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் லாரியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறுவதாக கூறி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் உயிரிழந்த அரசு ஊழியரின் உடல் அங்கிருந்து மீட்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.