விபத்துக்கு உரிய இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

தூத்துக்குடியில் விபத்துக்கு உரிய இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

Update: 2024-04-10 03:54 GMT

ஜப்தி செய்யப்பட்ட பேருந்து 

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் மகேசுவரன். இவர் குடும்பத்துடன் கடந்த 2016-ம் ஆண்டு காரில் திருச்செந்தூருக்கு வந்தனர். அப்போது, அரசு பஸ் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் ஒருவர் பலியானார். 4 பேர் காயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து மகேசுவரன் இழப்பீடு கோரி தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 2018-ம் ஆண்டு ரூ.17 லட்சத்து 76 ஆயிரத்து 695 இழப்பீடு வழங்க கோவை அரசு போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டார்.

இது தொடர்பாக பலமுறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் அரசு போக்குவரத்து கழகம் பணத்தை செலுத்த எந்தவித நவடிக்கையும் எடுக்கவில்லை இதனை தொடர்ந்து தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வக்கீல் ஆலன் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிலிப் நிக்கோலஸ், அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நேற்று திருச்செந்தூரில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பஸ்சை, கோர்ட்டு ஊழியர்கள் தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் வைத்து ஜப்தி செய்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News