சித்திரைப் பட்டத்திற்கான  உளுந்து சாகுபடி   தொழில்நுட்பங்கள்

உளுந்து சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்

Update: 2024-04-13 06:31 GMT

உளுந்து சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்

தஞ்சாவூர் மாவட்டம்,  பேராவூரணி வட்டாரத்தில் ஆங்காங்கே, அவ்வப்போது பெய்துவரும் கோடை மழையினை பயன்படுத்தி   உளுந்து சாகுபடி  செய்திட பேராவூரணி வட்டார விவசாயிகளுக்கு, வேளாண்மை  உதவி இயக்குநர் (பொ) ராணி  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்பொழுது பெய்துள்ள கோடை மழையினை பயன்படுத்தி  விவசாயிகள் கோடை உழவினை மேற்கொண்டு, சான்று பெற்ற உளுந்து விதைகளை பெற்று உடனடியாக விதைப்பினை  மேற்கொள்ள வேண்டும். சான்று பெற்ற  உளுந்து விதைகள் ஒரு வார காலத்திற்குள் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   

தரமான சான்று பெற்ற விதைகளை  ஏக்கருக்கு 8 கிலோ வீதம் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்து வரிசை நடவு முறையில்  வரிசைக்கு வரிசை 30 செ.மீ இடைவெளியும் பயிருக்கு பயிர் 10 செ.மீ இடைவெளியும் இருக்குமாறு விதைப்பு செய்திடல் வேண்டும்.  சான்று பெற்ற உளுந்து விதைகளை விதைப்பதற்கு முன் டிரைக்கோடெர்மா விரிடி  என்னும் உயிர்ப் பூசனக் கொல்லியினை  ஒரு கிலோவிற்கு 4 கிராம் வீதம்    விதை நேர்த்தி செய்து விதைப்பது அவசியமாகும்.  இம்மாதிரி விதை நேர்த்தி செய்து விதைக்கும் போது வேர் வாடல்  நோய் முற்றிலும் கட்டுப்படுத்தப்படுகிறது. மற்றும்  விதைப்பதற்கு முதல் நாள் ஒரு ஏக்கருக்கு  தேவையான விதையுடன்   ஒருபாக்கெட் ரைசோபியம்  பயறு மற்றும்  ஒரு பாக்கெட் பாஸ்போ பாக்டீரியாவை  ஆறிய கஞ்சியுடன் சேர்த்து  விதை நேர்த்தி செய்து  நிழலில் உலர்த்தி   பின்பு  விதைக்க வேண்டும். 

இப்படி செய்வதன் மூலம் விதை மூலம் பரவக்கூடிய  பூஞ்சான நோய்கள் யாவும் கட்டுப்படுத்தப்படுகின்றன. வளர்ச்சிப் பருத்தில்  ஒரு ஏக்கருக்கு  திரவ உயிர் உரங்களான  ரைசோபியம்  பயறு  200 மில்லி மற்றும்   பாஸ்போ பாக்டீரியா 200 மில்லி  வீதம்  பயன்படுத்தி தெளிப்பு செய்திட வேண்டும்.    பூக்கும்  பருவத்தில் 2  சதவீதம் டிஏபி தெளிப்பு செய்தல் மிகவும் அவசியமாகும். பூக்கும் தருணத்தில் ஒரு தெளிப்பும், 15  நாட்கள் கழித்து ஒரு தெளிப்பும் இலைவழி உரமாக  அவசியம் இட வேண்டும். இதனால் பூக்கள் உதிர்வது கட்டுப்படுத்தப்பட்டு  அதிக எண்ணிக்கையில்  பொக்கற்ற காய்கள் உருவாகி அதிக மகசூல்  கிடைக்கும். மேற்கண்ட  தொழில்நுட்பங்களை  கடைபிடித்து அதிக மகசூல் எடுத்து அதிக லாபம் பெற  வேண்டுமாய்  பேராவூரணி வட்டார விவசாயிகளுக்கு  வேளாண்மை உதவி இயக்குநர்  வேண்டுகோள் விடுத்துள்ளார்

Tags:    

Similar News