புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளில் ரூ.20லட்சம் மதிப்பில் பசுமை பணிகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 அரசு பள்ளிகளில் ரூ.20லட்சம் மதிப்பில் பசுமை பணிகள் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக, புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 12 அரசுப் பள்ளிகளில் தலா ரூ. 20 லட்சம் மதிப்பில் பசுமைப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற காலநிலை மாற்ற இயக்கக் குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டன. தேர்வு செய்யப்பட்ட பசுமைப் பள்ளிகள் விவரம்: புதுக்கோட்டைஅரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி, கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவரங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி,
கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, வெண்ணாகுடி அரசு மேல்நிலைப் பள்ளி, சிலட்டூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, சிலட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி, ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ரகுநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, மறமடக்கி அரசு மேல்நிலைப் பள்ளி, கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,
மாஞ்சான்விடுதி அரசு மேல்நிலைப் பள்ளி. இந்த 12 பள்ளிகளிலும், சூரியசக்தி மின் உற்பத்தி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்குதல், காய்கறித் தோட்டம் உருவாக்குதல், மூலிகைத் தோட்டம் உருவாக்குதல், உரம் தயாரித்தல், பிளாஸ்டிக் இல்லாத வளாகம் ஆகிய ஏற்பாடுகள் தலா ரூ. 20 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படவுள்ளன. இப்பணிகளை அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள்உதவியுடன் வனத்துறை,
உள்ளாட்சித் துறை போன்ற அமைப்புகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா அறிவுறுத்தினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர். ரம்யாதேவி, மாவட்ட வன அலுவலர் சோ. கணேசலிங்கம், மாவட்ட பசுமைத் தோழர் (காலநிலை மாற்றம்) வே. அபிராமி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.