மனைவியை கொன்ற மளிகைக்கடைகாரர்: 6மாதங்களுக்கு பிறகு கைது

Update: 2023-10-26 11:11 GMT

கோப்பு படம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வெண்குன்றம் மலை மீது கடந்த ஏப்ரல் மாதம் இளம்பெண் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த வந்தவாசி தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆனால், கொலையான பெண் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே, அடையாளம் தெரியாத அந்த சடலத்தை பிரேத பரிசோதனைக்கு பிறகு போலீசார் அடக்கம் செய்தனர். தொடர்ந்து, இதுகுறித்து வந்தவாசி போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த பெண் அணிந்து இருந்த தாலி தெலுங்கு மொழி பேசும் மக்கள் பயன்படுத்தும் தாலி என்பதால், ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவரை இங்கு அழைத்து வந்து கொலை செய்து இருக்கலாம் என கருதினர். எனவே, அந்த பெண் குறித்த விளம்பர நோட்டீஸை சித்தூர் மாவட்டம் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ஒட்டினர். மேலும், மாநிலம் முழுவதும் காணாமல் போனவர்கள் புகைப்படத்துடன் ஒப்பிட்டு பார்த்தனர். ஆனால், எதுவும் கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் ஒத்து போகவில்லை.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி டவுன் காவல் நிலையத்தில் 33 வயதுடைய நபர் தனது மனைவியை காணவில்லை என அவரது கணவர் ஜெயராமன் புகார் செய்தது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், காணாமல் போனதாக கூறப்பட்ட அந்த பெண்ணின் புகைப்படமும், வெண்குன்றம் மலையில் கொலையாகி கிடந்த பெண்ணின் புகைப்படமும் ஒத்துப்போனது. எனவே, வந்தவாசி போலீசார் சீர்காழி போலீசாரிடம் விபரம் கேட்டதில் காணாமல் போனவர் நித்யகல்யாணி(33) என்பதும், வந்தவாசி டவுன் பிராமணர் தெருவை சேர்ந்த சண்முகம் மகள் என்பதும் தெரியவந்தது.

மளிகைக்கடை நடத்தி வந்த சண்முகத்தின் மகன் ஆரணியில் ஏஜென்சி நடத்தி வருவதால், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆரணிக்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்தது தெரியவந்தது. எனவே, வந்தவாசி போலீசார் ஆரணிக்கு சென்று சண்முகம் குடும்பத்தினரை அழைத்து வந்து, மலையில் சடலமாக கிடந்த பெண்ணின் பழைய புகைப்படத்தை காட்டினர். அதில், கொலை செய்யப்பட்டது சண்முகத்தின் மகள் நித்யகல்யாணி என்பது உறுதியானது. கடந்த ஏப்ரல் மாதம் நித்யகல்யாணி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது கணவர் 5 மாதங்கள் கழித்து புகார் செய்துள்ளதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் விசுவநாதன், சப்- இன்ஸ்பெக்டர்கள் ராமு, பாபு, குற்றப்பிரிவு ஏட்டு ஏழுமலை ஆகியோர் கொண்ட படையினர் நேற்று முன்தினம் ஜெயராமனுடன் போனில் பேசினர். அப்போது, உனது மனைவி நித்யகல்யாணி வந்தவாசி அருகே உள்ளார். அவரை அழைத்து செல்லுமாறு நைசாக பேசியுள்ளனர். அதன்பேரில், வந்தவாசிக்கு நேற்று மதியம் வந்த ஜெயராமனிடம் போலீசார் தீவிர விசாரணை செய்தனர். அப்போது, ஜெயராமன் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து ஜெயராமனை (39) போலீசார் கைது செய்தனர். இதையடுத்து நடத்திய விசாரணையில் போலீசாரிடம் ஜெயராமன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறியதாவது: சீர்காழி பஜார் வீதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறேன். எனக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. 12 வயதில் மகன் உள்ளார். எனது மனைவி நித்யகல்யாணியுடன் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனைவி கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிடுவார். சில நாட்களில் சமாதானம் ஆனதும் மீண்டும் வீட்டிற்கு வருவார். அதேபோல், கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்ட நித்யகல்யாணி அவரது வீட்டிற்கு செல்லவில்லை. மறுநாள் செல்போனில் பேசியபோது வந்தவாசியில் இருப்பதாக தெரிவித்தார். உடனே இங்கு வந்த நான், வந்தவாசி அடுத்த வெண்குன்றம் மலை மீதுள்ள கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்லலாம் என மனைவியை அழைத்து கொண்டு சென்றேன். அங்கு இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது எங்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, ஆத்திரமடைந்த நான் மனைவி நித்யகல்யாணியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர், சடலத்தை அங்கேயே வீசிவிட்டு சென்றுவிட்டேன். எனது மனைவி நித்யகல்யாணி அடிக்கடி கோபித்துக் கொண்டு செல்வதால் யாருக்கும் சந்தேகம் எதுவும் ஏற்படவில்லை. இதற்கிடையில், பல மாதங்களாக நித்யகல்யாணி வீட்டில் இல்லாததால் அக்கம் பக்கத்தினர் கேட்க ஆரம்பித்தனர். அவர்களை நம்ப வைப்பதற்காக கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி சட்டநாதர் கோயிலுக்கு சென்ற மனைவி நித்யகல்யாணியை காணவில்லை என செப்டம்பர் மாதம் 13ம் தேதி சீர்காழி போலீசில் புகார் செய்தேன்.

என் மீது சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காக தான், போலீசார் அழைத்த போதும் ஒன்றும் தெரியாததுபோல் வந்தவாசிக்கு வந்தேன். ஆனால் நான் மனைவியை ெகாலை செய்ததை கண்டு பிடித்து கைது செய்தீர்கள். இவ்வாறு வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீசார் கூறினர். இதையடுத்து, ேபாலீசார் ஜெயராமனை கைது செய்து, வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News